யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தூபி உடைப்பு விவகாரம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போர் நினைவுச்சின்னத்தை தகர்க்கும் தீர்மானத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தில் அரசாங்கம் கொள்கை முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நினைவுச்சின்னத்தை அழித்து பின்னர் அதை புனரமைப்பதற்கான முடிவு பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அதிகாரிகள் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் யுத்த நினைவுச்சின்னம் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்று பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்திருந்தார்.

யுத்த நினைவுச்சின்னம் 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுடன் பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள் என்று அமரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புதிய நினைவுச்சின்னத்தின் கட்டுமாணப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.