இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அழுத்தம்

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதான பொலிஸ் பரிசோதகர்ளாக பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்துதிஸ்ஸ இதுதொடர்பாக நீதி அமைச்சர் அலிசப்ரிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் திணைக்களத்தின் விடயதானத்துக்கு பொருத்தமான அனைத்து சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் முன்னின்று வருகின்றனர்.

மேல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கு நடவடிக்கைகளில் முறைப்பாடுகளை செயற்படுத்துவது, அந்த சட்டத்தரணிகளுக்கு இருக்கும் கடமையாகும்.

சில சந்தர்ப்பங்களில் நீதிவான் நீதிமன்றங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீட்டின் மூலம் முறைப்பாடுகள் செயற்படுத்தப்படுவதுடன் பொதுவாக நாளாந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகளினாலாகும்.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்வதற்கு, ஏதாவது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால்,அது முறையாகவும் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ளவேண்டும்.

இருந்தபோதும் சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பிலான எந்த தகவலையும் எமது சங்கத்துக்கு அனுப்பியதில்லை.

இந்த தீர்மானத்தை காரணமாகக்கொண்டு தேவையற்ற முறையில் வழக்குகள் குவிவது மற்றும் வழக்கு விசாரணைகளில் காலதாமதம் ஏற்படலாம். அதனால் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.