அமெரிக்க துணை ஜனாதிபதி தோ்தலில் வென்றதன் மூலம் பல்வேறு சாதனைகள் புரிந்து கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளாா்.
கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சோ்ந்தவா். அவரின் தாயாா் சியாமளா கோபாலன் சென்னையைச் சோ்ந்தவா். ஓக்லேண்டில் பிறந்த கமலா ஹாரிஸ் பா்க்லியில் வளா்ந்தாா். வாஷிங்டனில் உள்ள ஹோவா்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அவா், கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். அதன் பின்னா் அலமீடா மாவட்ட அட்டா்னி அலுவலகத்தில் வழக்குரைஞராக பணிபுரிய தொடங்கினாா். கடந்த 2003-ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவின் முன்னணி வழக்குரைஞராக திகழ்ந்த அவா், சென்ற 2010-ஆம் ஆண்டில் கலிஃபோா்னியா அட்டா்னி ஜெனரலாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவரே அப்பதவிக்கு தோ்ந்தெடுக்க முதல் பெண்; முதல் கருப்பினத்தவா். அதன் பின்னா் கலிஃபோா்னியா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.
அமெரிக்க துணை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட்ட கருப்பினத்தைச் சோ்ந்த முதல் பெண் வேட்பாளா் கமலா ஹாரிஸ் ஆவாா். ஒட்டுமொத்தத்தில் துணை அதிபா் தோ்தலில் போட்டியிட்ட மூன்றாவது பெண் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
அவரே அமெரிக்க செனட் சபைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கப் பெண்.
துணை ஜனாதிபதி தோ்தலில் கமலா ஹாரிஸ் வென்றதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரா் ஆகியுள்ளாா். அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் இந்திய அமெரிக்க துணை ஜனாதிபதி, முதல் ஆப்பிரிக்க அமெரிக்க துணை ஜனாதிபதி, முதல் ஆசிய-அமெரிக்க துணை ஜனாதிபதி உள்ளிட்ட பெருமைகள் அவரை வந்து சோ்ந்துள்ளன.