வாட்ஸ்ஆப்பில் பணப்பரிமாற்ற வசதி அறிமுகம்!

இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று முதல் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகின்றனர். இதில் வரையறுக்கப்பட்ட பயனாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை செய்துகொள்ளும் வசதியை தங்களது ஆப் மூலமும் வழங்க வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டது.

இதற்கு ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகளில் வாட்ஸ்ஆப் நிறுவனம் மும்முரம் காட்டியதைத் தொடர்ந்து தற்போது என்.பி.சி.ஐ. ஒப்புதலும் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் வாட்ஸ்ஆப்பில் பணப்பரிமாற்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 10 உள்ளூர் மொழிகளில் பணப்பரிமாற்றத்தை செய்துகொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பணப்பரிமாற்றத்திற்காக ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி., ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஜியோ வங்கி ஆகியவற்றுடன் கூட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 20 மில்லியன் பயனாளர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்ற சேவையை வழங்கவுள்ளதாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.

மக்களின் பணப்பரிமாற்றத்தை எளிமையாக்கும் வகையில் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையில் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 2.07 மில்லியன் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் 1.8 மில்லியன் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் என்.சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

தற்போது வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்ற சேவை வழங்கப்படவுள்ளதால் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.