தண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்?

பூமியில் உயிர்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று தண்ணீர். ஆனால் விலை மதிப்பற்ற இந்தத் திரவம், திடீரென நமக்குக் கிடைக்காமல் போனால் என்னவாகும்?

அந்த ஆறு ரொம்ப தொலைவில் இல்லை. சில நூறு மீட்டர்கள் கீழே பள்ளத்தில் பாறைகளைத் தழுவி ஓடும் ஜம்பெஜி ஆறு, சாஜ் போவெல் பார்க்கும் அளவில்தான் இருக்கிறது. ஆவலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது.

“நான் எவ்வளவு தாகமாக இருந்தேன் என்பதை விவரிக்க முடியாது” என்கிறார் போவெல். மலைமுகட்டின் உச்சியில் தள்ளாடும் நிலையில் இருந்த அவரிடம் தண்ணீர் தீர்ந்துவிட்டது. ஆற்றுக்குப் போவதற்கு வாய்ப்பு கிடையாது. தன்னுடைய பரிதாபகரமான அந்த சூழ்நிலை குறித்து நினைவுபடுத்திக் கூறிய போவெல், குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற கவலை தொற்றிக் கொண்ட பதற்றத்தைப் பற்றி கூறினார்.

“அந்த சமயத்தில் உண்மையிலேயே நோயுற்றது போல உணர்ந்தேன். என் உடலின் வெப்பம் தாறுமாறாக உயர்ந்தது போல உணர்ந்தேன்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிரிட்டனில் ஷ்ரோப்ஷயரைச் சேர்ந்த சாசக பயண வழிகாட்டியான போவெல், நம்மில் பெரும்பாலானவர்கள் சாதாரணமாக நினைக்கும் அந்தப் பொருள், இல்லாத இடத்தில் சிக்கித் தவிப்பதை அனுபவிக்கும் சூழ்நிலையில் இருந்தார்.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில், குழாய்களைத் திறந்தாலே சுத்தமான குடிநீர் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் பல் துலக்கும்போது, ஷவரில் குளிக்கும்போது, கழிவறையில் தண்ணீரை திறக்கும்போது, எந்த சிந்தனையும் இல்லாமல் கேலன் கணக்கில் தண்ணீரை மக்கள் வீணடிக்கிறார்கள்.

ஆனால் உலகம் முழுக்க சுமார் 1.1 பில்லியன் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. வருடத்தில் குறைந்தது ஒரு மாத காலத்திற்காவது 2.7 பில்லியன் பேருக்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

பூமியில் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. நமக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால், வெகு வேகமாக நிலைமை மோசமாகிவிடும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜம்பெஜி ஆற்றின் நீளத்தை ஒட்டி தனியாக நடைபயணம் மேற்கொண்டபோது போவெல் இந்த அனுபவத்திற்கு ஆளானார். அந்த ஆறு ஜாம்பியாவில் உருவாகும் இடத்தில் இருந்து தன்னுடைய பயணத்தை அவர் தொடங்கியிருந்தார். கிழக்கு அங்கோலாவில் அந்த ஆற்றை ஒட்டி நடந்து சென்ற அவர், நமீபியா மற்றும் போட்ஸ்வோனா எல்லைகளைக் கடந்து சென்றார். விக்டோரியா அருவிக்கு அடுத்து, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லையில் மலைச்சிகரங்களை அடைந்தார். அங்கே நடந்து செல்வதை சிரமமாக்கும் வகையில் கரடுமுரடாக இருந்தது.

“செங்குத்தான சிகரங்கள் கொண்டதாக சுமார் 150 மைல்களுக்கு இருந்தது” என்று போவெல் தெரிவித்தார்.

2016 ஆகஸ்ட் வருடத்தின் மிகுந்த வெப்பமான காலக்கட்டம். பகலில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவைத் தொட்டது. அப்போது போவெல் வயது 38. அந்த காலக்கட்டத்தில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள போவெல் தேர்வு செய்தார். 90 சதவீத நேரம் நீர் பரவியிருக்கும் பரோட்சே பிளபிளெயின்ஸ் பகுதியை அப்போது கடப்பது எளிதாக இருக்கும்.

தினமும் 20 மைல்கள் என்ற அளவில் அவருடைய டிரெக்கிங் நன்றாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் முகடுகளுக்குச் சென்றபோது, அவருடைய வேகம் கணிசமாகக் குறைந்தது.

“பாறைகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் தினமும் 2 மைல்கள் நடந்திருப்பேன். அந்த அளவுக்கு மெதுவாக செல்ல வேண்டியிருந்தது” என்கிறார் போவெல்.

அவ்வளவு குறைவான வேகத்தில் முகடுகளைக் கடந்து மறுமுனைக்குச் செல்ல ஒரு மாதம் ஆகும் என போவெல் கணக்கிட்டிருந்தார். பல மைல்கள் தொலைவில் வேறு யாரையும் காண முடியாத சூழலில், அவரிடம் இருந்த உணவுகள் தீர்ந்து கொண்டிருந்தன. “கீழே தொலைவில் குரங்குகள் கற்களை வீசிக் கொண்டிருந்தன. பெரிய பள்ளத்தில் கலங்கலான நீரோட்டம் இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

பள்ளத்தாக்கில் தன் பயணத்தை 2 வாரங்கள் தொடர்ந்த பிறகு, வேறொரு பாதையை கண்டறிய வேண்டும் என்று போவெல் முடிவு செய்தார். ஜம்பெஜி ஆற்றை நோக்கி வேறொரு ஆறு வருவதை அவரிடம் இருந்த வரைபடம் காட்டியது. “அந்த ஆற்றை அடைவதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதன் உச்சிப் பகுதி எப்படி இருக்கும் என்று தெரியாது. வேகமாக நடந்தால் 4 மணி நேரத்தில் அடைந்துவிடலாம் என்று நினைத்தேன்” என்று அவர் கூறினார்.

அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்களுடன் முகடுகளில் போவெல் சென்றார். ஜம்பெஜி ஆற்றில் இருந்தே தண்ணீரை குடித்துக் கொண்டு நடந்து வந்ததால், அதைவிட அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர் நடக்கத் தொடங்கியபோது வெப்பம் 48 டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. 3 மணி நேரத்தில் முகடை அவர் கலந்துவிட்டார். அது 750 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் செங்குத்து பாதையாக இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். அப்போது அவரிடம் ஒரு தண்ணீர் பாட்டில் மிச்சம் இருந்தது. ஆனால் உச்சியை அவர் அடைந்தபோது, அவர் நினைத்தது போல இருக்கவில்லை.

“உச்சியில் சமவெளியாக இருக்கும், நடப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் முற்கள் நிறைந்ததாக அது இருந்தது. அடுத்தடுத்து சிறு குன்றுகளாக இருந்தது” என்கிறார் போவெல். பாதையை தேடுவதற்கு 3 மணி நேரம் சுற்றிச் சுற்றி வந்ததில் அவரிடம் இருந்த தண்ணீர் காலியாகிவிட்டது.

“அநேகமாக நான் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பேன். அப்போதும் முகடுகளைக் கடக்கவில்லை. எனவே திரும்ப கீழே செல்லலாம் என முடிவு செய்தேன்” என்று அவர் நினைவுகூர்கிறார்.

ஆனால் மேலே வந்து ஏறிய இடத்தில் அவர் இல்லை. அப்போது ஒரு முகட்டின் விளிம்பில் இருந்தார். கீழே பள்ளத்தில் ஆறு ஓடுவதை அவரால் பார்க்க முடிந்தது. ஆனால் அங்கே செல்ல வாய்ப்பு கிடையாது.

சராசரியாக மனித உடலில் 60-70 சதவீதம் தண்ணீர் உள்ளது. வயதைப் பொருத்து அது அமையும். சிறுநீர், வியர்வை, மலம், சுவாசம் மூலம் நீர் வெளியேறுகிறது. எனவே, தண்ணீர் குடித்தல் மற்றும் உணவருந்துதல் (நமது உணவில் இருந்து மூன்றில் ஒரு பங்கு நீர் கிடைக்கிறது) மூலம் நாம் ஈடு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

நீர்ச்சத்து குறைவதன் முதலாவது நிலைதான் தாகம். உடல் எடையில் 2 சதவீதம் குறையும்போது இது ஏற்படும். “தாகம் தோன்றும்போது, மிச்சமிருக்கும் நீர்ச்சத்தில் உடல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என அர்த்தம்” என்று குடலியல் சர்ஜரி துறை பேராசிரியர் திலீக் லோபோ கூறுகிறார். திரவங்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்கள் சமன்பாடு குறித்து அவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். “சிறுநீரகங்கள் குறைவான நீரை சிறுநீர்ப்பைக்கு அனுப்பும். சிறுநீர் அடர்நிறத்தில் இருக்கும். வியர்வை குறையும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். ரத்தம் தின்மையாக, மெல்ல நகர்வதாக மாறும். ஆக்சிஜன் அளவைப் பராமரிக்க, உங்கள் இதயத் துடிப்பு வேகம் அதிகரிக்கும்” என்று திலீப் லோபோ தெரிவிக்கிறார்.

உடலின் தன்மைக்கு ஏற்ப, நீர்ச்சத்து குறையும் வேகம் மாறுபடும். ஆனால் 50 டிகிரி சென்டிகிரேடில் தண்ணீர் இல்லாமல், கடினமான உடற்பயிற்சி அல்லது உழைப்பு இருந்தால், நீர்ச்சத்துக் குறைபாடு சீக்கிரத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும்.

“எவ்வளவு வெப்பத்தை மனித உடல் தாங்கிக் கொள்ளும் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அதைக் கடந்தால் வெப்பத்தால் உளைச்சல் ஏற்படும், மரணமும் கூட ஏற்படலாம். மிகவும் குளிரான காலத்திலும் மரண விகிதம் அதிகரிக்கும். ஆனால் மிகவும் வெப்பமான காலங்களில் தான் இது அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சூடான சுற்றுச்சூழலில் உடற்பயிற்சி செய்யும்போது, வியர்வை காரணமாக மனித உடல் ஒரு மணி நேரத்துக்கு 1.5 – 3 லிட்டர் வரை தண்ணீரை இழக்கும். சுற்றுப்புற காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பொருத்து, நாம் விடும் மூச்சுக்காற்றின் ஈரப்பதம் மூலமாக மேலும் 200 – 1500 மில்லி வரை தண்ணீர் இழப்பு ஏற்படும்.

மனித உடலில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீர்ச்சத்து குறைபாடு லேசாக ஏற்பட்டாலும், அதிக களைப்பாக உணர்வோம், உடல் இயக்க வேலைகளை செய்வது கஷ்டமாக இருக்கும். அதிக நீரை இழக்கும்போது, வியர்வை மூலமாக சூட்டைக் குறைக்கும் திறனும் குறைந்துவிடுகிறது. இதனால் மிதமிஞ்சிய வெப்பம் ஆபத்தை உருவாக்குகிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் தண்ணீரை விட, இழக்கும் அளவு அதிகமாக இருக்கும்போது, நமது ரத்தம் தின்மையாக மாறத் தொடங்குகிறது. அதிக அடர்வாக மாறும். அதாவது இருதயம், நமது ரத்த அழுத்தத்தை பராமரிக்க கடினமாக வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

சிறுநீர் அளவைக் குறைப்பதன் மூலம் அதிக நீரை தக்கவைத்து, இதை ஈடுசெய்ய சிறுநீரகங்கள் முயற்சி செய்யும். செல்களில் இருந்து தண்ணீர் ரத்த ஓட்டத்தில் வெளியே வந்து சேரும். இதனால் செல்களின் அளவு சுருங்கும். தண்ணீர் குறைந்து, ரத்த அழுத்தம் குறைந்து 4 சதவீத உடல் எடை குறையும்போது மயக்கம் ஏற்படும்.

மூன்றாவது நிலையில், நமது உடல் எடையில் 7 சதவீதம் குறையும்போது, உடல் உறுப்பு பாதிக்கப்படும்.

“உங்கள் உடல் ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க சிரமப்படும். நிலைமையை சமாளிக்க, சிறுநீரகங்கள், குடல்கள் போன்ற அதிக முக்கியத்துவம் இல்லாத உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தின் வேகத்தை அது குறைக்கும். இதனால் அவை பாதிப்புக்கு உள்ளாகும். உங்கள் ரத்தத்தை சிறுநீரகங்கள் வடிகட்டத் தவறினால், செல் கழிவுகள் தேங்கத் தொடங்கும். ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்குவீர்கள்” என்று லோபோ விவரிக்கிறார்.

இருந்தாலும் நீர்ச்சத்து அதிகமாக இழப்பு ஏற்பட்டாலும், சிலரால் தீவிரமாக செயல்பட முடியும். நீண்ட தொலைவுக்கான ஓட்டப்பந்தய வீரரும், பயிற்சியாளருமான ஆல்பர்ட்டோ சலாஜர், 1984 ஒலிம்பிக் மராத்தான் போட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸில் கொளுத்தும் வெயிலில் பங்கேற்றபோது ஒரு மணி நேரத்துக்கு 3.06 லிட்டர் தண்ணீரை இழந்தார் என கணக்கிடப்பட்டது.

அவரது உடல் எடையில் 8 சதவீதம் குறைந்ததாகவும் தெரிய வந்தது. இருந்தாலும் மராத்தான் முடிந்ததும் சீக்கிரத்தில் அவர் மீண்டும் நீர்ச்சத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்தது. மருத்துவ நிபுணர்கள் குழு அவரை கவனித்துக் கொண்டது.

இருந்தாலும், தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில், உதவியை நாடுவது என்று போவெல் முடிவு செய்தார். தாம் வைத்திருந்த, அவசர கால உதவிக்கான எஸ்.ஓ.எஸ். போனை அவர் ஆக்டிவேட் செய்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சேவை நிறுவனத்துடன் அது இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உதவக் கூடிய அளவுக்கு பக்கத்தில் யாரையும் அந்த நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

வேறு வழியில்லாத நிலையில், காய்ந்த மண்ணில் ஒரு பள்ளம் தோண்டி உடல் சூட்டை குளுமையாக்க முயற்சித்தார். நீர்ச்சத்து அதிகரிக்கும் பாக்கெட்டுடன் கலந்து தன்னுடைய சிறுநீரையே அவர் குடிக்கத் தொடங்கினார்.

ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரில் 95 சதவீதம் தண்ணீர் இருக்கும். மீதி கழிவுகளாக இருக்கும். சிறுநீரகங்கள் வெளியேற்றிய உப்புகள், அம்மோனியா போன்ற கழிவுகளாக அது இருக்கும். நீர்ச்சத்து குறைந்து யாராவது களைப்புற்றால், உடலில் தண்ணீர் குறைந்துவிடும் அந்த நிலையில், கடல் நீரை குடிப்பது போல ஆகிவிடும்.

“நீர்ச்சத்தை அதிகரித்துக் கொள்ள அவசரத்திற்கு, சிறுநீரை குடிப்பது பாதுகாப்பானது தான் என்றாலும், உப்பு மற்றும் தண்ணீரை சேமிப்பது தான் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான உடல் ரீதியிலான செயல்பாடாக இருக்கும்” என்று லோபோ கூறுகிறார்.

“சிறுநீர் அளவு குறையும். கடைசியாக சிறுநீரகங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு, சிறுநீரை உற்பத்தி செய்வது பாதிக்கப்படும். எனவே நீர்ச்சத்தை போதிய அளவுக்கு அதிகரித்துக் கொள்வதற்கு, நடுத்தர காலத்துக்கு சிறுநீரின் அளவு போதுமானதாக இருக்காது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

நிறைய தண்ணீர் இல்லாமல் நீர்ச்சத்து அதிகரிக்கும் உப்புகளை சேர்ப்பது போவெலுக்கு உதவியாக இருக்கும், உப்புகள் மற்றும் சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும். ஆனால் அவருடைய உடலில் எதிர்மறை சமன்பாட்டை உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. உப்பு அளவில் சமச்சீர் இல்லாத நிலை ஏற்பட்டால் இயக்கம் நின்று போவது மற்றும் மூளையில் ரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது.

அவர் தோண்டிய பள்ளத்தில் உடலை குளிர்வித்துக் கொண்டார். ஆனால் வேகமாக நீர்ச்சத்து குறைந்து கொண்டிருந்தது.

வாக்கிங் தி நைல் – என்ற ஆவணப்படத்தைப் பார்த்தது, அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெரிய ஆற்றை ஒட்டி நடை பயணம் மேற்கொண்டபோது, அந்த பயணக் கட்டுரை எழுத்தாளர் மாட் பவர் வெப்ப ஸ்டிரோக் தாக்குதலுக்கு ஆளானது பற்றி அந்த ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. “அதை நினைத்ததும், வேகமாக வெப்பம் அதிகரிப்பதாகத் தோன்றியது. என் உடல் அதிகம் சூடாவதாக தோன்றியது. உண்மையில் நலிவுற்றுப் போனேன்” என்று போவெல் கூறினார்.

கடைசியாக எஸ்.ஓ.எஸ். குழு போவெலை தொடர்பு கொண்டது. தங்களால் ஒரு ஹெலிகாப்டரை அனுப்ப முடியும், ஆனால் அதற்கும் 4 மணி நேரம் ஆகும் என்று அவர்கள் கூறினர். “4 மணி நேரத்தில் நான் செத்துவிடுவேன் என்று நினைத்தேன்” என்று போவெல் நினைவுகூர்கிறார். “இங்கே அமர்ந்திருப்பதைவிட, சிகரத்தில் இருந்து கீழே குதித்து செத்துவிடலாம் என்று எனக்கு தோன்றியது” என்றும் அவர் தெரிவித்தார். பிடித்துக் கொள்வதற்கு மரங்களின் வேர்கள் சில இடங்களில் இருப்பதை அவர் பார்த்தார். எனவே கீழே செல்வது என முடிவு செய்தார். ஆனால் 15 அடி தூரத்துக்கு சறுக்கிக் கொண்டு போனதில் மூக்கில் காயம் ஏற்பட்டது.

நீர்ச்சத்து குறைந்து களைப்பு ஏற்பட்டதால் கீழே இறங்கும் முடிவுக்கு அவர் வந்தார். நீர்ச்சத்து குறைபாடு தீவிரமாகும்போது, மூளையின் செயல்பாடு பாதிக்கும். நமது மனநிலையை பாதிக்கும். தெளிவாக சிந்திக்கும் திறனையும் பாதிக்கும். நமது மூளைக்கு ரத்த ஓட்டம் மற்றும் மூளையின் அளவேகூட குறையும். நீர்ச்சத்து குறைபாடு லேசானது முதல் மிதமானது வரை இருந்தால் உடலின் நீரில் 2 சதவீதம் அல்லது கூடுதலாகக் குறைந்தால் – தற்காலிக ஞாபக மறதி, விழிப்பு நிலை பாதிப்பு ஏற்படும். கணக்கிடும் திறன், ஒருங்கிணைக்கும் திறன்கள் பாதிக்கும். குறிப்பாக சூடான சுற்றுப்புறத்தில் கடுமையான பணிகளைச் செய்யும்போது இவை ஏற்படும். முதியவர்களாக இருந்தால், நீர்ச்சத்து குறையும்போது சித்தபிரமை போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அட்ரீனலின் சுரப்பு அதிகரிப்பதாலும், உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையினாலும், எதெல்லாம் கையில் கிடைக்கிறதோ அவற்றைப் பிடித்துக் கொண்டு போவெல் தொடர்ந்து கீழே சென்றார். ஒரு தொங்கு பாறையை எட்டியபோது, மயக்கமானார். சிறிது நேரம் கழித்து நினைவுக்கு வந்தார்.

“என் கைகளில் ரத்தம் வடிந்தது. முகம் முழுக்க ரத்தம். என் கால்களில் சிராய்ப்புகள்” என்று அவர் கூறினார். அப்போதும்கூட, தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கீழ்நோக்கி அவர் நகர்ந்து கொண்டே இருந்தார். ஒருவழியாக ஆற்றுக்கு சென்று சேர்ந்தார். உடலை குளிர்விப்பது, தண்ணீர் குடிப்பது என ஒரு மணி நேரம் அங்கே செலவழித்தார். பிறகு தன் சாடிலைட் போனை எடுத்து, தாம் நன்றாக இருப்பதாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் அனுப்பினார்.

“சாஜ் தானாகவே தண்ணீரும், நிழலும் தேடிக் கொண்டு, தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டுவிட்டார்” என்று லண்டனில் பணியாற்றும் எமர்ஜென்சி மருத்துவப் பயிற்சி டாக்டர் நட்டாலி குக்சன் தெரிவித்தார். “நிழலில் ஓய்வு எடுத்ததால் உடல் வெப்பம் குறைந்து, நீர்ச்சத்து குறைபாடு செயல்பாடு குறைந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, குடிக்கும் தரத்திலான நீரை போவெல் அடைந்தபோது, அவர் இழந்துவிட்டிருந்த தண்ணீரை அது ஈடு செய்தது. “நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய முடியும். உடலில் நீர் அளவை அதிகரித்தால், முழுமையாக குணம் அடைவது சாத்தியமே,” என்கிறார் குக்சன்.

தண்ணீர் குடிக்க அவர் சமாளித்துக் கொள்ளாமல் போயிருந்தால், போவெலின் சிறுநீரகங்கள் செயல்படாமல் போயிருக்கும். சிறுநீரகங்கள் வழியே வெளியேற்ற போதிய தண்ணீர் இல்லாத நிலையில், நச்சுகள் தேங்கி இருக்கும். எனவே சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாமல் போயிருக்கும். சிறுநீரக தீவிர திசு அழுகல் என்ற நிலைக்கும் அது கொண்டு சென்றிருக்கும். மீண்டும் நீர்ச்சத்தை சமன் செய்தாலும், இதில் இருந்து குணமாக பல வாரங்கள் தேவைப்படும்.

இருதயத்தில் ஏற்பட்ட கூடுதல் வேலைப்பளு, முறையற்ற இதயத் துடிப்புகளை உருவாக்கி இருக்கும், ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டிருக்கும், இருதயம் செயல்படாமல் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. நீர்ச்சத்துக் குறைபாடு இருதய இயக்கத்தைப் பாதித்து, ரத்த நாளங்கள் தடிமனாகி மாரடைப்பு அபாய அதிகரிப்புக்கும் காரணமாக ஆகியிருக்கும்.

வெப்பமான பருவநிலையில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது, பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும்.

“இந்த வெப்பத்தை உடலால் ஒழுங்குபடுத்த முடியாமல் போகும். இதனால் வழக்கமான உடல் இயக்கப் பாதைகளில் முக்கியமான சுரப்பிகள் பாதிக்கப்படும். இதனால் மூளை, இருதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் செயல்படாமல் போகலாம்” என்று குக்சன் தெரிவிக்கிறார். கடைசியாக இது செயல்பாட்டை நிறுத்தலாம், கோமா நிலையை ஏற்படுத்தலாம், உறுப்புகள் செயல் இழப்பதால் மரணம் நேரிடலாம்.

தண்ணீர் இல்லாமல் ஒருவர் எவ்வளவு காலம் உயிர் வாழலாம் என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் மனிதனால் சில தினங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1944ல் இரண்டு விஞ்ஞானிகள் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்தனர். ஒருவர் மூன்று நாட்களும், இன்னொருவர் நான்கு நாட்களும் அப்படி இருந்தனர். ஆனால் உலர் உணவுகளை எடுத்துக் கொண்டனர். அவர்களுடைய சோதனையின் இறுதி நாளில், எதையும் விழுங்க முடியாமல் அவர்கள் சிரமப்பட்டனர், அவர்களுடைய முகங்கள் “வெளிறிப் போய்விட்டன.” ஆனால் நிலைமை அபாயகரமாக மாறுவதற்கு முன்னதாகவே அவர்கள் பரிசோதனையைக் கைவிட்டனர்.

தண்ணீர் இல்லாமல் எவ்வளவு நாட்களுக்கு இருக்கலாம் என்பது தனிப்பட்டவர்களைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு நபர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப உடல் தகவமைப்பு செய்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிக்காமல் அதிக நாட்கள் இருக்கலாம் என்பது ஆண்ட்ரியாஸ் மிஹாவெக்ஸ் மூலம் தெரிய வந்தது. 1979ல் ஆஸ்திரியாவில் செங்கல் பதிக்கும் வேலை பார்த்து வந்த 18 வயதான அவர் காவல் துறையினரின் காவல் அறையில் 18 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கே இருப்பதை காவலர்கள் மறந்து போனதால் அந்த நிலை ஏற்பட்டது. அவருடைய அந்த சூழ்நிலை குறித்து, உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர நீர்ச்சத்து குறைபாட்டு நிலைமையை நம்மில் பலரும் அனுபவிக்கும் நிலையில், உலகில் சுமார் 4 பில்லியன் மக்கள் வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது தீவிர தண்ணீர் பஞ்சத்துக்கு ஆளாகின்றனர். பருவநிலை மாற்றங்கள் காரணமாகவும், உலகில் பல பகுதிகளில் தூய்மையான குடிநீர் வசதி கிடைப்பது அரிதாகும் நிலை உள்ளது. 2025 ஆம் ஆண்டு வாக்கில், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போவெலைப் பொருத்தவரையில், தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடிய போராட்டம் சுமார் 10 மணி நேரம் நீடித்தது. லிவிங்ஸ்டன் திரும்பி ஒரு வாரம் ஓய்வு எடுத்த பிறகு, வேறொரு பாதை வழியாக தன் பயணத்தை அவரால் தொடர முடிந்தது. தன் நடைபயணத்தை அவர் 137 நாட்களில் நிறைவு செய்தார். அவருடைய அனுபவம் ஒரு பாடமாக இருந்தது மட்டுமின்றி, தண்ணீர் எவ்வளவு முக்கியமானது என்ற பாடத்தை அவருக்குக் கற்பிப்பதாகவும் அது இருந்துள்ளது.

“அதை ஒருபோதும் இனி நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று அவர் கூறினார்.