தமிழர்கள் அனைவருக்கும் நன்றி! தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரித்தானிய பிரதமர்

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமிழர்கள் திருநாளான தைத் திருநாளில், தமிழில் வணக்கம் சொல்லி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் கொண்டாடும் நாளாக இந்த தைத் திருநாள் பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், தமிழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜோன்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வணக்கம் என்று தமிழில் துவங்கி ஹேப்பி தைப் பொங்கல் என்ற வாழ்த்துக்கள் என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொங்கல் பண்டிகை என்பது பொங்கல் என்னும் சுவையான உணவுக்காக மட்டுமின்றி ஒரு பெருவிழா என்பதை அறிவேன்.

இந்த விழாவானது அறுவடையை ஒட்டி விவசாயிகள் வழிபாடு செய்யும் திருநாளாக இருந்துள்ளது. இந்த திருநாளை பிரித்தானிய தமிழர்களுடன் இணைந்து கொண்டாட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வர்த்தகத்தின் மூலம் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியிருப்பதாகவும், பள்ளிகளில் பாடங்கள் நடத்தியும், நோயாளிகளுக்குச் சேவை செய்தும், அங்குள்ள சமூகத்துக்கு பெரும் பணி ஆற்றி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நாட்டை உலகத் தரத்தில் உயர்த்த தமிழர்களின் ஒவ்வொரு குடும்பமும் பாடுபடுவதாக கூறியுள்ள ஜோன்சன், இதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.