துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பங்குகளை வாங்க எமது நாட்டில் நிறுவனங்கள் உள்ளன – அசாத் சாலி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பங்குகளை பெற்றுக்கொள்ள உள்நாட்டில் நிறுவனங்கள் இருக்கின்றன. அரசாங்கம் முடியுமானால் அதுதொடர்பில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

Articles Tagged Under: அசாத் சாலி | Virakesari.lk

தேசிய ஐக்கிய முன்னணி இன்ற கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் வளங்கள் எதனையும் வெளிநாடுகளுக்கு வழங்கப்போவதில்லை என்றும் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கியவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஒரு மாதத்திலேயே சங்கிரில்லா ஹோட்டலுக்கு அடுத்ததாக இருந்த காணியை அரசாங்கம் வெளிநாட்டு கம்பனி ஒன்றுக்கு விற்பனை செய்தது.

ராணுவ தலைமையகம் இருந்த காணியே தற்போது சங்கிரில்லா ஹோட்டல் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போதே அதனை சங்கிரில்லா ஹோட்டலுக்கு விற்பனை செய்தார்கள்.

அத்துடன் தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

ஆனால் கிழக்கு முனையத்தை வழங்குவதில்லை என குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதமர் தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு முனையத்தின் 49 வீத பங்கை இந்தியாவுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அதனை மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

மேலும் துறைமுக தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் நூறுவீத பங்கும் துறைமுக அதிகாரசபைக்கு கீழே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

அரசாங்கம் இந்தியாவுக்கு கொடுப்பதன் மூலம் பெரும் லாபத்தை தங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்றே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதனால் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருப்பதை அரசாங்கம் தெரிவித்து, கொழும்பு துறைமுகத்தின் 49வீத பங்கை பெற்றுக்கொள்ள யாரேனும் முன்வந்தால் அதனை வழங்குவதற்கு தயார் என முடியுமானால் விளம்பரப்படுத்தவேண்டும்.

அவ்வாறு செய்தால் உள்நாட்டில் இருக்கும் கம்பனிகள் அதனை பெற்றுக்கொள்ள முன்வரும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.