தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பெப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து ஆரம்பிக்க அரசாங்கம் தயார்

கொரோனாவுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பெப்ரவரி கடைசி வாரத்தில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசிகளை பெறுவதற்கான இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு 20 சதவீத மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.

இந்தநிலையில் இன்று இரவுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்புக்கு இது தொடர்பான தேசிய திட்டத்தை சுகாதார அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் உலக சுகாதார அமைப்பு, எந்த தடுப்பூசியை இலசமாக வழங்கும் என்பது தமக்கு தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. சீனாவும் விரைவில் தமது பதிலை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.