பிக்பாஸ் என்பது மற்ற மொழிகளில் ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தமிழில் மட்டும் இந்நிகழ்ச்சி பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆக்கபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசன் கொண்டு செல்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமின்றி அதில் சில அரசியல் கருத்துக்களையும், ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தக அறிமுகமும் செய்து வைப்பதை கமல்ஹாசன் தவறுவதில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு போய் சேரவேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடக்கும் சமூக நிகழ்வுகளையும் அவர் அதில் குறிப்பிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்றைய பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சியில் பல்வேறு சமூக கருத்துக்களை கமல்ஹாசன் தெரிவித்தார். அதில் ஒன்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்தும் பேசினார்.
இந்த நிலையில் தனது மகனின் விடுதலைக்கு ஆதரவாக பேசிய கமலஹாசனுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை… ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை… பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!’ என்று பதிவு செய்துள்ளார்.