வாகன இறக்குமதிக்கு தடை! அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்

வாகனங்களை இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்க அரசாங்கத்துடன் கூட்டு உடன்பாட்டை எட்டும் நோக்குடன் எதிர்வரும் வாரங்களில் உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்குவது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனெனில் வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வீழ்ச்சியடைந்த வாகன பங்குகள் காரணமாக பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் வாகன விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.கே. கமகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

“வாகன இறக்குமதியாளர்கள் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்நிலையில், இறக்குமதியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் பயனளிக்கும் ஒரு உடன்படிக்கைக்கு வர அரசாங்கத்துடன் கலந்துரையாட அவர்கள் தயாராக உள்ளனர்.

வரி வருமான இழப்பு காரணமாக அரசாங்கத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு, மாற்றுத் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அதற்கான தீர்வுகளில் ஒன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாகவும்.

அத்தகைய வரியைத் தெரிவு செய்ய அரசாங்கம் முடிவு செய்தாலும், இறக்குமதியாளர்கள் தற்போதைய சந்தை விலைகளை விட குறைந்த விலைக்கு வாகனங்களை வழங்க முடியும்.” என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாகன இறக்குமதிக்கான ஆரம்ப தடை குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே விதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அரசாங்கம் வாகன இறக்குமதி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.