கோட்டாபய அரசுக்கு புதுடெல்லியிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படை படகுடன் மோதியதில் இந்திய மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கோட்டாபய அரசுக்கு புதுடெல்லி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று புதுடெல்லியில் உள்ள இலங்கை பதலி உயர் ஸ்தானிகரிடமும் கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

“உயிர் இழப்பு குறித்து எங்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்திய நாங்கள், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கிடையில் இருக்கும் புரிந்துணர்வுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் பார்த்துக் கொள்ள அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ”என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.