கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் மௌனம் – ரணில்

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தடுப்பூசிகள் தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தர தீர்வு கிடையாது.

எனினும் தடுப்பூசிகள் தொடர்பில் உறுதியான முடிவை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் தடுப்பூசிகளை விரைவில் நாட்டுக்கு எடுத்துவருவதாக கூறிக்கொண்டிருக்காது செயல் வடிவில் காண்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொதாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் நாட்டு மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், கட்சி பேதமின்றி அவர்களை காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும்.

இந்நிலையில் , இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்னமும் அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவுமில்லை.

தற்போது , ஊடகங்கள் மக்கள் மத்தியில் வெறுமனே நம்பிக்கையை மாத்திரமே ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு எடுத்துவரப்படும் என்று கூறிவருகின்றன.

ஆனால் தடுப்பூசிகள் எவ்வாறு நாட்டுக்கு எடுத்துவரப்படும். இது தொடர்பில் அரசாங்கம் ஏதாவது ஒரு நாட்டுடனோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதா? என்பது தொடர்பில் எந்த ஊடகமும் அரசாங்கத்திடம் கேள்வியொழுப்புவதில்லை.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , கொவெக்ஸ் வசதிகள் ஊடாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் , இதற்காக 25 ஆயிரம் மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

நாம் அறிந்தவகையில் இதன்போது முழு நாட்டுக்குமே அவசியமான தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாது , அதற்கமைய , முதற்கட்டமாக 3 சதவீத தடுப்பூசிகளும் , இரண்டாவது கட்டமாக 18 சதவீத தடுப்பூசிகளும்தான் கிடைக்கப்பெறவுள்ளன.

இதேவேளை நாம் அதிர்ஷ்டசாலிகள் என்றால் இவ்வருட இறுதிக்குள் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறலாம் , இல்லை என்றால் எதிர்வரும் வருடம்வரை நாம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்நிலையில் , வைரஸ் பரவலின் தாக்கமானது , எதிர்வரும் 3 வருடங்கள் வரை காணப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை , ஐக்கிய இராச்சியம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது என்று தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் அரசாங்கத்தினால் எவ்வாறு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தமுடியும்.

அதனால் , வைரஸ் தொற்றை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று போலி நம்பிக்கைகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம்.

வைரஸ் பரவல் தொடர்பான உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரிவிப்பதன் மூலமே , அதிலிருந்து எம்மால் பாதுகாப்பு பெறமுடியும்.

இதேவேளை வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது , அதன் பிரதான பொறுப்பை சுகாதார பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் கையளிப்பதுடன் , ஏனைய பிரிவுகளிலும் சுகாதார துறையைச் சேர்ந்தவர்களே இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுவே தற்போது நாட்டுக்கு அவசியமானதாகும்.