உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் சடலங்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில், கடந்த 18ஆம் திகதியிரவு உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இன்றுகாலை(23.01.2021) காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் கைதிலிருந்து தப்பிக்க, கடற்படை படகை மோதி சேதப்படுத்தி மிக ஆபத்தான முறையில் படகை செலுத்த முற்பட்ட போது சமனிலை குலைந்து நீரில் மூழ்கியதாக கூறப்பட்ட இந்திய மீனவப் படகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் மூழ்கிய படகையும், இரு மீனவர்களின் சடலங்களையும் மீட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த கடற்பரப்பில் தேடுதல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில், இன்றுகாலை உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.