அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி குறித்து விசாரித்துவரும் இராணுவத்தினர்: குழப்பத்தில் ஊர்மக்கள்

சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அங்குள்ள மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அம்மன் ஆலய கேணியுள்ள காணியை அபகரிக்கும் முயற்சியா என்ற அச்சம் ஊர்மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன், குறித்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணியையும் அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

மேலும்,குறித்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்தமானதெனவும் அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்றுகாலை தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது.