சிறிலங்காவில் பாரிய மனித உரிமை மீறல்!அதை விசாரிக்க மீறியவர்கள் ஆணைக்குழுவில்!

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இது போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் விசாரிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (21.01.2021) வெளியிடப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஏ.எச்.எம்.டி. நவாஸ் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் பின்வருமாறு:

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னர் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களினால் கடுமையான மனித உரிமை மீறல்கள், கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்தல்.

குறித்த விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களினால் கண்டறியப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனவா என்று ஆராய்தல்.

அந்த பரிந்துரைகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் இதுவரையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் தற்போதைய அரச கொள்கைக்கு ஏற்ப அந்த பரிந்துரைகளை செயல்படுத்த மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானித்தல்.

முதலாவது மற்றும் இரண்டாவது பந்திகளின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்தல்.

தேவையான விசாரணைகளை நடத்துவதற்கும், தேவைக்கேற்ப இடைக்கால அறிக்கைகளை ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. மேலும் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் போது தேவையான அனைத்து உதவிகளையும் தகவல்களையும் வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படும்.

ஆணைக்குழு நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விசாரணை ஆணைக்குழு நியமனத்தின் பின்னணி வர்த்தமானி அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது. 2015 ஒக்டோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” தொடர்பான 30/1 தீர்மானத்திற்கும் மற்றும் அதனுடன் இணைந்த 34/1 மற்றும் 40/1 தீர்மானத்திற்கும் இணை அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை விலகுவதாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளது.

ஆயினும்கூட, நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் மனிதவள மேம்பாட்டை அடைந்துகொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கையாகும். தீர்க்கப்பட வேண்டிய ஏனைய பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் சட்ட செயல்முறைகளுக்குள் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான வகையில் நிறுவன சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

அரசாங்க கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதில் இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால் அது குறித்து விசாரணைகளை செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காகவே மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.