இந்தியாவிலிருந்து தடுப்பூசிகளின் 6 இலட்சம் குப்பிகளை பெற்றுக் கொள்ள உள்ள சிறிலங்கா

இந்தியாவில் இருந்து ஒக்ஸ்போர்ட் – எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் 6 இலட்சம் குப்பிகளை இலங்கை பெற்றுக் கொள்ள உள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குப்பிகள் எப்போது இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளன என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்காக இந்திய அதிகாரிகள், இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை நேற்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியது.

அதேநேரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதி இலங்கையில் வழங்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்தது.