மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளப்போவதுமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுக் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், எதிர்வரும் பெப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை சமாளிக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழு குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் பாரிய அளவில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கை குறித்த காத்திரமான அறிக்கை ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அரசாங்கம் இந்த நெருக்கடிகளை சமாளிக்கவே தற்போது மூவர் அடங்கிய ஆணைகுழு ஒன்றினை நியமித்துள்ளது. ஆனால் இந்த ஆணைக்குழுவினால் சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க எதனையுமே செய்ய முடியாது என்பதே உண்மையாகும்.
அத்தோடு, ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேசம் கருத்தில் கொள்ளப்போவதும் இல்லை. இலங்கையில் இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இதனை ஆராயவோ, உண்மைகளை கண்டறியவோ இதுவரை எந்தவித முயற்சிகளையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் ஒருபக்க சார்பை மாத்திரம் வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் அமைந்திருந்தன. அவ்வாறு இருக்கையில் முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கையை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில் புதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது முற்று முழுதாக கேலிக்கூத்தாகவும் என்றார்.