ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை தொடர்பில் இலங்கை கடுமையான எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லேட் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கைக்கு பின்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது என வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கைகளை விடவும் தற்போது அனுப்பிவைத்துள்ள அறிக்கை மிகவும் மோசமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது இலங்கையில் இருந்து இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்ட Shadow reporting ( நிழல்) அறிக்கையிடல் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது என நாம் நம்புகின்றோம். “என வெளிவிவகார செயலாளர் மேலும் கூறினார்.

இது குறித்து முன்னணி ஆங்கிலப்பத்திரிகைக்கு கருத்துவெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ‘ எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்னமும் உறுதிப்படுத்தப்படாதவர்கள் குறித்தே ஐநா ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ‘ எனக் கூறியுள்ளார்.

” அந்த அறிக்கையிலுள்ள சில விடயங்கள் இந்தத்தருணத்தில் முற்றுமுழுதாக அவசியமற்றவை என நாம் கருதுகின்றோம். எம்மை தவறுகாண முயலும் எந்த நாட்டை விடவும் இலங்கை மிகவும் அமைதியானதாகவும் ஸ்திரமானதாகவும் உள்ளதென நாம் உணர்கின்றோம்.

அது ( அறிக்கை ) இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கம் பொதுமக்களுக்கு அதனைப் பகிரங்கப்படுத்தும் எனவும் வெளிவிவகாரச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தயாரிப்பதற்காக தினமும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. உள்நாட்டு நிபுணர்களைத்தவிர ஏனைய நாடுகளிலுள்ள தன்னார்வலர்களும் தமது அவதானங்களை அனுப்பிவைக்கின்றனர். அனைத்து உள்ளீடுகளும் சேர்க்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் முன்னைய அறிக்கைகளை விடவும் இந்த அறிக்கை மோசமானது. யுத்தம் தொடர்பான குறிப்புக்களை சுட்டிக்காட்டிக் கொண்டு கடந்த வருடத்தில் இடம்பெற்ற விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்

‘வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கலான நீதிப்பொறிமுறையை ஸ்தாபிப்பதைத்தவிர 30/1 தீர்மானத்தின் கீழ் முன்னைய ஆட்சியாளர்கள் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வாக்களித்த அனைத்து விடயங்களையும் இலங்கை நிறைவேற்றியுள்ளது. ‘எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படமுன்னதாக இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லேட் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படுவதற்கும் இலங்கையர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதற்கும் சாத்தியமுள்ளதாக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கைக்கு பதிலளிக்க இலங்கைக்கு ஜனவரி 27ம்திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. பயணத்தடை மற்றும் சொத்துக்கள் முடக்கம் ஆகிய யோசனைகளுக்கு மேலதீகமாக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவியல் நகர்வுகளை முன்னெடுத்தல் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கும் சாட்சிகளை சேகரிப்பதற்கும் சர்வதேச பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குமான யோசனைகளையும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லேட் முன்வைத்துள்ளார்.