இலங்கையின் பொறுப்புக்கூறலில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது! அமெரிக்க தூதுவர்

சீனாவின் உடன்படிக்கைகளால் இலங்கைக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மைகள் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்

நேற்று காலை இடம்பெற்ற ஒரு மெய்நிகர் கலந்துரையாடலில் கருத்துரைத்த அவர், இலங்கை இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் கட்டாய கொரோனாத் தகனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தகன முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தினார்.

பொது சுகாதாரத்தின் போது அனைத்து சமூகங்களின் மரபுகளுக்கும் பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கு எதிராக சாத்தியமான பொருளாதாரத் தடைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயம் அளித்த பரிந்துரைகள் குறித்து கருத்துரைத்த அவர், இலங்கையின் பொறுப்புக்கூறலில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆராய அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுக்க சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலங்கை அரசாங்கத்தின் கடமைகளில் முன்னேற்றத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் மனித உரிமைகளுக்கான ஆதரவு இலங்கையை கொடுமைப்படுத்தும் முயற்சி அல்ல என்று அவர் கூறினார். மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்கள், உரிமைகளை நிறைவேற்றுவதை ஆதரிக்கும் செயற்பாடுகள் என அவர் சுட்டிக்காட்டினார்.