நீதிமன்ற தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட பேரணியில் மக்கள் வெள்ளம் …

நீதிமன்ற தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினால் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பழைய வைத்திய சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக பழைய மாவட்ட செயலகம் வரை சென்றது.

இதன் போது இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை கண்டித்தும், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்தியவாறு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் இணைந்தவர்கள் வாயினையும் கறுப்பு துணிகளால் கட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த பேரணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறித்த போராட்த்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு பொலிசாரினால் பெறப்பட்டிருந்தபோதிலும் அதனை மீறி குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பேரணியின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி கருத்து தெரிவித்தார். இன்றைய போராட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த மக்களை புதுக்குடியிருப்பில் பொலிசார் தடுத்து வைத்தமை தொடர்பிலும் இதன்புாது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஐநாவிற்கு எமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை நாங்கள் இன்று அனுப்புகின்றோம். குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை நாங்கள் இங்கு குறிப்பிடுகின்றோம்.
இன்று பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.

1948 முதல் ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த அரசுகளினால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் உரிமைகளையும், உடமைகளையும் இழந்து தமது சொந்த நிலத்திலயே அகதிகளாகவும், புலம்பெயர்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களால் தற்போது இலங்கைத்தீவில் ஆட்சி நடாத்தப்படுகிறது .

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் போது அரச படைகளாலும், துணை இராணுவக்குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப்படவில்லை.

பேமேற்படி விடயத்தில் நீதிக்கான செயன்முறைகளில் எந்தவித முன்னேற்றம் இல்லாது தொடர்ந்தும் தமிழ் மக்களின் கலாச்சார,பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன், எமது பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்பதனை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

2009 இல் சிறீலங்கா அரசு இனவழிப்பு ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பாங்கி மூன் அவர்கள் மூவர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.

போரின் போது கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச சட்டத்தின் அனைத்து பரிமானங்களையும், இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தில் மீறியுள்ளதாக அந் நிபுணர்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இலங்கை அரசு பல இழுத்தடிப்புகளை செய்து கண்துடைப்பிற்கு அன்றும் இன்றும் பல ஆணை குழுக்களை நியமித்தது. ஆனால் நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செயன்முறைகளில் அவை முற்றாகப் புறமொதுக்கப்பட்டது.

தமிழரின் பூர்வீக தேசமான வடக்கு.கிழக்கை இராணுவமயமாக்கி வரும் அரசாங்கம், தமிழ் மக்களின் கலாச்சார , பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன், தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகைகளிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்,தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கல் போன்றன நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.
தொல்பொருள் அகழ்வு இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் பரவலாக முன்னெடுக்கப்படும் ஓர் அகழ்வாராச்சியாகும். ஆனால், தமிழர் செறிவாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டும் புதுமையான முறையில் மதவழிபாடுகளுடன் இராணுவம் புடைசூழ வைபவ ரீதியாக ஆரம்பித்து புத்தர் சிலைகலை நிறுவி தமிழர் வரலாற்றை திரிவுபடுத்தி அழித்து வருகின்றனர்.

ஆகவே கடந்த கால சம்பவங்களையும் ,நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள ஏந்தவித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தங்கள் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாகவோ அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகவோ மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தாங்கள் பரிந்துரைக்க வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஐ.நா விசேட குற்றவியல் நீதிமன்றம் இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாங்கள் காலம் தாழ்த்தாது பரிந்துரைக்க வேண்டும்

தொடர்ந்து இங்கு நடைபெற்று வரும் மீறல்களுக்கு இலங்கையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொறுப்புக்கூறலில் இருந்து திசைதிருப்பப்படாமல் இருக்க சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை நிறுவி சர்வதேச தரத்திலான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாங்கள் பருந்துரை செய்து எமக்கான நீதியை பெற்று தரும்படி வேண்டி நிக்கின்றோம்

என அவர் தெரிவித்தார்.