கடுமையான பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவின் சில பகுதிகளில் கோவிட் – 19 தடுப்பூசி மையம் மற்றும் பாடசாலைகளை மூடும் வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் பெரும்பகுதியையும் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீண்ட நேர தாமதம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில், இன்று சுமார் 5-10 சென்றி மீற்றர் வரையான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மிட்லாண்ட்ஸ், யோர்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகியவற்றின் பகுதிகளிலும், குறிப்பாக லிங்கன்ஷைர் வோல்ட்ஸ் பகுதிகளிலும், இங்கிலாந்தில் வேறு சில பகுதிகளில் 15 சென்றி மீற்றர் வரையான பன்ப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டார்சி புயல் காரணமாக கடுமையான குளிர் நிலைமை இருக்கும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நோர்போக், லிங்கன்ஷைர், கம்ப்ரியா, டெர்பிஷைர் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் ஆகிய இடங்களில் சாலை மூடல்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளில் வாகனங்களை செலுத்துவது அசாத்தியமானவை என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் சேவைகள் பாதிக்ககூடும் என்றும், சில வழித்தடங்களை மூடுவது அவசியமாக இருக்கலாம் என்றும் தேசிய ரயில்வே பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு லண்டனில் ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்ட் மற்றும் எசெக்ஸில் உள்ள ரயில் பாதைகளை மூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் சில தடுப்பூசி மையங்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்தன, எசெக்ஸ், சஃபோல்க், சர்ரே மற்றும் நோர்போக் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் லிங்கன்ஷையரின் தென்கிழக்கில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.