குருந்தூர் மலையில் மீண்டன தாரா லிங்கமும் கருவறையும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டுவரும் அகழாய்வு நடவடிக்கையில் இந்தியாவின் பல்லவர் காலத்து (கி.பி. 275–கி.பி. 897) பயன்பாட்டு வடிவமைப்புக்களில் ஒன்றான தாரா லிங்கம் எனப்படுகின்ற அமைப்பினை உடைய உருவச் சிலை ஒன்றும் அது பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற கட்டட இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிலையுடன் செங்கற்கள் அல்லது அதனை ஒத்த கற்களாலான கருவறை என்று கருதப்படும் கட்டட இடிபாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு தொல்லியல் திணைக்களத்தினரும் யாழ்ப்பாணத்தின் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து குருந்தூர் மலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அகழ்வு நடவடிக்கைகள் குறித்த ஒளிப்படங்களை தொல்லியல் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

இதனை பௌத்த விகாரை எச்சங்கள் வன்னியில் மீட்கப்பட்டுள்ளதாக திவயின உட்பட்ட சிங்கள இனவாத பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே,

குறித்த உருவத்தின் அமைப்பு சிவலிங்கத்துக்கு ஒத்ததாக காணப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் தமிழகத்தில் இருக்கின்ற தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த உருவத்திலான சிவலிங்க வழிபாடு பல்லவர் காலத்துக்கு உரியது என்றும், அந்த வடிவ லிங்கம் தாரா லிங்கம் என்றும் அரிதாகவே அந்த லிங்க உருவங்கள் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

தாரா லிங்கம் பற்றி தமிழகத்தின் தங்கம் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் இருந்து

முக லிங்கங்களைப் போன்றே தனிச் சிறப்பு வாய்ந்தவை தாரா லிங்கங்கள். லிங்கத்தின் பாணப்பகுதியில் முகங்களுக்கு பதிலாக அழகிய பட்டைகள் அமைந்தவை தாரா லிங்கங்கள். பல்லவ அரசர்கள் வெகு சிறப்பாக தாரா லிங்கங்கள் அமைத்தனர் என்பதை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த வகை லிங்கங்களின் பாணப் பகுதியில் 4, 8, 16, 32, 64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகையாக பட்டைகள் அமைந்திருக்கும். இந்தப் பட்டைகள் ‘தாரா’ எனப்படும்.

இதில் நான்கு பட்டைகள் கொண்டது ‘வேத லிங்கம்’. பாடல் பெற்ற திருத்தலமான சக்ரப்பள்ளியில் வேத லிங்கத்தைக் காணலாம்.

எண் பட்டை (அஷ்ட தாரா) லிங்கம் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் அனைத்திலும் உள்ளன. காஞ்சிபுரம் கயிலாயநாதர் ஆலயம், திருவதிகை வீரட்டானேசுவரர் ஆலயம் ஆகியவற்றில் இந்த வகையான லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன.