சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு குடை பிடிப்பதை நிறுத்தி நடுநிலையாக செயற்படுங்கள்! – பீற்றர் இளஞ்செழியன்

இறுதிப்போரில் நடைபெற்றது வெறும் மனித உரிமை மீறல் எனவும் இலங்கை அரசை நம்பி நடவுங்கள் என இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கு சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் காட்டமாகப் பதில் அழித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில்,

இறுதிப் போரில் குளிரூட்டப்பட்ட அறையில் மகிந்த அரசின் பாதுகாப்பிலிருந்த பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு இனப்படுகொலை பற்றி என்ன தெரியும்? என்றும் இறுதிப் போரில் நடைபெற்றது மனித உரிமை மீறல் மட்டுமல்ல திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை. பேராயர் மல்க்கம் ரஞ்சித் இனவாதத்தை மறை முகமாகக் கக்குவதையும் தவிர்க்கவேண்டும்.

தொடர்ந்து இன அழிப்புத் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவோ அல்லது நீதி கோரியோ கேள்வி தொடுக்க விரும்பாத நிலையில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் மல்க்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளமை தொடர்பாகக் கூறியுள்ளமை தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்கு, கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர்.

அதில் 1985 ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார், அருட்தந்தை கிளி, அருட்தந்தை ரஞ்சித் கிளைமோரில் கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பணிபுரிந்த முல்லைத்தீவை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

2009 இல் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரன் அடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று 1993 நவம்பர் யாழ்ப்பாண குருநாதர் புனித யாகப்பர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர்.

1995 ஆம் ஆண்டு யாழ் நவாலி புனித யாக தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 125 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயப்பட்டனர்.

1998 வவுனிக்குளம் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர் 50க்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டனர்.

1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.

இந்த திட்டமிட்ட இனப்படுகொலையில் அருட்தந்தையர்கள், தமிழ் கத்தோலிக்கர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் தேவாலயங்கள் அளிக்கப்பட்டுமிருந்தது.

அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுக்கவில்லை.

இந்த அருட்தந்தையர்களின் படுகொலைக்கும் தமிழ் கத்தோலிக்கர்களின் படுகொலைக்கும் தேவாலயங்கள் மேல் தாக்குதல் செய்து அளித்த இந்த இலங்கை இராணுவம் மேலும் மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் மேலும் ஏன் சர்வதேச விசாரணையைக் கோர பதுங்குவதன் ஏன் எனக் கேள்வியையும் தோடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கட்சிகளினால் பேசப்பட்டு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென ஜெனிவா மனித உரிமை சபையிடம் பொது ஆவணம் ஒன்று கையாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை எல்லாம் புறம் தள்ளி இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்க்கம் ரஞ்சித் இதை ஒரு பௌத்த நாடு என்றும் தனது இனத்தவர்களான சிங்கள மக்களைக் குளிரச்செய்யவும் ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடப்போவதாகா கூறியது பேராயர் இனம்சார்ந்தே பேசுகின்றார் என்பது வெளிப்படையாகி உள்ளதுடன் மறைமுகமாக இனப்படுகொலையலிகளை காப்பாற்றவே இவ்வாறு செயற்படுகின்றார் என்பது உண்மையே.

வடக்கு, கிழக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்கள், அளிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு நீதி கோர முன்வராதா இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பேராயராக இருக்கத் தகுதியுடையவரா எனத் தமிழ் கத்தோலிக்கர்களிடம் வினா எழும்பியுள்ளது.

இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்கு, கிழக்கு ஆயர்கள்,அருட்தந்தையர்கள் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாகக் கருத்துக் கூறும் சந்தர்ப்பங்களில் அவர்களைக் கண்டிப்பது போன்ற தொனியிலும் இலங்கை அரசாங்கத்தின்மீது நம்பிக்கை செலுத்த வேண்டுமென்றும் இது பௌத்த நாடு என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்றும், இறுதி யுத்தத்தில் நடைபெற்றது மனித உரிமை மீறல் என்றும் அடிக்கடி உரைப்பதில் இனவாதம் ஒன்று மறைமுகமாக இருப்பது வெளிப்படையாகவுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நீதி எவ்வளவு முக்கியமோ இன அழிப்புக்குள்ளான ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கான நீதியும் அறம் சார்ந்த செயற்பாடும் பிரதானமானது என்பதை பேராயர் புரிந்து கொள்ளவேண்டும்.

அதை விடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் நல்லவனாக நடிப்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்த கத்தோலிக்கருக்கும் ஆயனாகவும் நீதியாகவும் நடக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.