தேசிய வளங்களை விற்கமாட்டோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கி விட்டனர் என்று ஓமல்பே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேரர்,
தேசிய வளங்களை விற்பதற்கு எதிராகவும், சர்வதேச தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கவும் தாம் ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறி மக்களிடம் வாக்குறுதிகளை கொடுத்து ராஜபக்ஷவினரின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகி நிற்கின்றனர் என்பது வெளிப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த வேளையில் நாம் தலையிட்டு முழுமையாக எமது வளத்தை மீட்டெடுத்தோம்.
மீட்டெடுத்து பெருமூச்சு விட முன்னர் மேற்கு முனையத்தை அதே உடன்படிக்கைக்கு அமைய வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயல் என்றே நாம் கருதுகிறோம். அரசாங்கம் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அடிபணிந்து செயற்பட்டு வருகின்றது.
தேசிய வளங்களை விற்கமாட்டோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கொடுத்த வாக்குறுதிகளை பொய்யாக்கி விட்டனர்.
அதற்கான வெளிப்பாடே தற்போது அமைச்சரவை தீர்மானங்கள் மூலமாக வெளிப்பட்டு வருகின்றது. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நாசகார செயற்பாடுகளுக்கு நிச்சயமாக ராஜபக்ஷ அரசாங்கம் மக்களிடம் பதில் கூறியாக வேண்டும்.
அரசாங்கம் இப்போது விடும் தவறுகளுக்காக நிச்சயமாக மக்கள் கஷ்டப்பட வேண்டிவரும் என்பதை நாம் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.