தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் கூட தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறுகிய காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று பேராயர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தேர்தலின் போது இந்த விடயத்தை அரசியல் இலாபத்திற்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்பது உண்மையில் அரசாங்கத்தின் தேவையாகக் காணப்பட்டதா ? உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் மனைவி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் ஏன் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமலுள்ளது ?
இவ்வாறிருக்க கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். காரணம் இலங்கையின் அந்நிய செலாவணியில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றார்.