உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடியாகலாம் – எதிர்க்கட்சி

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளால் பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை இனங்காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

ஜெனீவாவில் இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரமும் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் இலங்கைக்கு மிகமோசமான அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று, பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாங்கி மூனை ஏமாற்றியதைப் போல, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் பேராயரை ஏமாற்றியதைப் போல, சர்வதேசத்தையும் அரசாங்கத்தால் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்றும் துஷார இந்துனில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் பேராயரை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றால் இரு வாரங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று வாக்குறுதியளித்தார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடித்ததைத் தவிர, வேறு எதனையும் செய்யவில்லை.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கொண்டு யாரையும் கைது செய்ய முடியாது என பேராயரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தீவிரவாத அமைப்பினதும் தலைவர் தற்கொலை செய்து கொள்வதில்லை. மாறாக தலைவர் தற்கொலை செய்து கொண்டால் , அந்த அமைப்பின் முழு இலக்கும் வீணடைந்துவிடும்.

எனவே, சஹ்ரானை இயக்கியது யார்? அவரின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? இவருக்கு நிதியுதவி வழங்கியது யார்? இவர்களின் உண்மையான இலக்கு என்ன? இதனால் யார் இலாபத்தைப் பெற்றுக் கொண்டார்கள்? என்ற எந்தவொரு கேள்விக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பதில் இல்லை.

 

அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளால் பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை இனங்காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஜெனீவாவில் இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கோரி சர்வதேசத்தை நாடவும் தயார் என்று பேராயர் எச்சரித்துள்ளார்.

அவர் கூறுவதைப் போன்று இவ்விடயம் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் இலங்கைக்கு மோசமானதொரு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

பாங்கி மூன் மற்றும் பேராயர் உள்ளிட்டோரை ஏமாற்றியதைப் போல சர்வதேசத்தையும் ஏமாற்ற முடியாது. தாக்குதல்கள் தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மை தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

இவை அனைத்தும் அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அனைத்தும் நிறைவடைந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணியிருக்கும்.

ஆனால் அரசாங்கத்திலுள்ள ஒரு தரப்பினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றார்.