அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்டு 15ஆவது தடவையாக வழங்கப்பட்டுவரும் “சர்வதேச துணிச்சல் மிக்க பெண் 2021“ எனும் விருதுக்கு இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரனிதா ஞானராஜாவுடன் உலகெங்கிலும் இருந்து இம்முறை ஏழு பெண்கள் தெரிவு செய்யபட்டிருப்பதாக அமெரிக்கா வெளியுறத்துறை செயலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதிக்காவும் போராடும் துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் இவ்விருதுக்கு இம்முறை சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவாகியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இலவச சட்ட உதவி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குதல், குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லாத வகையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பட்டு வருபவர் என்றும் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்விருது வழங்கும் விழா வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை காணொளி தொழில்நுட்பத்தினூடாக இடம்பெறவுள்ளது. உலகின் துணிச்சல்மிக்க பெண்களை கௌரவிக்கும் இந்த விருது விழாவில் அமெரிக்காவின் முதல் பெண்மணி வைத்தியர் ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து உரையாற்றவுள்ளார்.
15ஆவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்ற அதேவேளை இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 155 பெண்கள் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறத்துறை செயலகம் சுட்டிக்காட்டிள்ளது.