இலங்கைக்கு மறு அடி கொடுத்து தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கரீபியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலாவதாக ஆரம்பமாகியுள்ள டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இலங்கை அணியானது 43 ஓட்டங்களினால் வெற்று தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.

இந் நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆன்டிகுவாவில் அமைந்துள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப வீரர்களான குணதிலக்க (9), பதும் நிசங்கா (5) ஆகியோர் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, திக்வெல்ல 4 ஓட்டத்தையும், அணித் தலைவர் மெத்தியூஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் அணி சார்பில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த தினேஷ் சந்திமால் 46 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களுடனும், ஆஷென் பண்டார 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அதன் பின்னர் 132 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 19 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை தொட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் லென்ட்ல் சிம்மன்ஸ் 26 ஓட்டங்களையும், எவின் லூயிஸ் 21 ஓட்டங்களுடனும், கிறிஸ் கெய்ல் 13 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் கிரேன் பொல்லார்ட் டக்கவுட்டுடனும், நிகோலஷ் பூரண் 23 ஓட்டங்களுடனும், ரோவ்மன் பவல் 7 ஓட்டங்களையும் மற்றும் டுவைன் பிராவோ டக்கவுட்டுடனும் ஆட்டமிக்க, ஹோல்டர் 14 ஓட்டங்களுடனும், ஃபேபியன் ஆலன் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சந்தகான் 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சாமர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஃபேபியன் ஆலன் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.