அரசியல் பழிவாங்கல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் தினேஸ் குணவர்தனவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் மோசடி விசாரணை, எப்.சீ.ஐ.டி மற்றும் குற்ற புலனாய்வுப் பிரிவு , பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு என்பனவற்றினால் குறித்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதிகார துஸ்பிரயோகம், வரப்பிரசாதங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை, அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.