கோட்டாபய ராஜபக்ஷ தனது சொத்து மதிப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்தல்

ஜனாதிபதி மாறுப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுபவராக இருப்பின் தனது  சொத்து மதிப்பை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எரான்  விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன் இந்த செயற்பாடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. நீதிமன்றில் விசாரணையில் உள்ளஒரு வழக்கு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு வழக்கு பற்றி அரசியல் மட்டத்தில் கருத்துரைப்பது கூட நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் நிலையில் வழக்கு விசாரணைகளை எவ்வாறு ஆணைக்குழுவினால் முடிவுக்கு கொண்டு வர முடியும்.

ஆளும் தரப்பின் உள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்றில் விசாரணையில் இருந்த வழக்குகள் பல ஆணைக்குழுவினால் இரத்து செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றின் அதிகாரத்தை ஆணைக்குழுவுக்கு வழங்கியது யார். இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.