நாம் 11 ஆண்டுகள் காத்திருக்கிறோம் : கிறிஸ்தவர்கள் 2 ஆண்டுகளில் சர்வதேச விசாரணையை கோருகின்றனர் – சுமந்திரன்

இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு  ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது.

 

எனவே உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை இன்று நிரூபனமாகிவிட்டது எனவும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இராச்சியம் தோற்றுவிட்டது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய போதே ஆளும் கட்சியினர் இதனை கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிக மோசமான தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது. இதில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தெளிவாக இலக்கு வைக்கப்பட்டன. பல நூறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் பாதிக்கப்பட்டனர்.

எவ்வாறு இருப்பினும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரி யார் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்புகின்றார். ஆனால்  அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என சபையில் கூறிகின்றார்.

அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. முதலில் பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை வாசிக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறியும் வழிமுறையை பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையின் பல விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலை யார் திட்டமிட்டது, யார் பின்னால் இருந்து இயங்கியது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதே கண்டறியப்பட வேண்டும். அதுமட்டுமல்ல இந்த தாக்குதலினால் யாருக்கு பயன் கிடைக்கும் என்பது ஒரு கேள்வியாகும், அதேபோல் யார்  பயனடைந்தனர் என்ற கேள்வியும் கேட்க வேண்டியுள்ளது.

ஆனால் இதற்கு பதில் எம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் இரண்டு ஆண்டுகளாக இந்த தாக்குதல் குறித்து ஆராயப்பட்டு வருகின்ற போதிலும் இன்னமும் இந்த தாக்குதலின் பின்னாலுள்ள பிரதான சூத்திரதாரியை கண்டறியவில்லை. அப்படியென்றால் இது மறைக்கப்படுகின்றது.

இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, தாக்குதல் நடத்த மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டும், இறுதி நேரத்தில் கூட தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்க முடியாமல் போயுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்துமே தாக்குதலுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும். பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும், ஜனாதிபதி அணைக்குழுவிழும் விசாரிக்கப்பட்டும் இப்போது வரையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரியாது என அரசாங்கம் கூறுகின்றது என்றால், இதன் பின்னணியில் எதோ தவறு இடம்பெறுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் அதுவே பொறுப்பான இராச்சியத்தின் கடமையாகும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் குற்றவாளிகளை கண்டறிய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது, அவ்வாறு இருக்கையில் இவ்வாறான மிக முக்கியமான விடயமொன்று கைவிடப்படுகின்றது என்றால் இராச்சியமாக நாம் பலவீனமடைந்துள்ளோம்.

இந்த நாட்டில் எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தை கேட்டு நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்போம் என கூறியவர்கள் இப்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கின்றனர்.

ஏன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது? ஏனென்றால் பொறுப்புக்கூறலை நிறைவேற்றவும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டவும்  இராச்சியமாக தோற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இப்போது இடம்பெற்றுக்கொண்டுள்ளது. எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக பதினோரு ஆண்டுகள் கேட்டுக்கொண்டுள்ளோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்றுவரை தொடர்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை ஆராயவும் பொறுப்புக்கூறவும் வலியுறுத்துகின்றோம்.

ஆனால் இன்றுவரை எமது குரலுக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும்  கிறிஸ்தவ மக்களின் நியாயத்தை பெற்றுக்கொள்ள உள்ளக விசாரணைகளில் முடியாது போயுள்ள இரண்டு ஆண்டுகளில் சர்வதேச விசாரணையை கேட்டுவிட்டனர்.

நாம் 11 ஆண்டுகளாக காத்துக்கொண்டுள்ளோம். அப்படி இருக்கையில் எமது கோரிக்கை நியாயமில்லை என கூற எவருக்கும் இப்போது தகுதியில்லாது போய்விட்டது.

இதுவே மக்களுக்கான பொறுப்புகூறலில் இராச்சியம் தோல்வி கண்டுள்ளது என தெரிவிக்கின்றோம். இந்த விடயத்தில் உங்களின் மதத் தலைவரே சர்வதேச விசாரணையை கேட்டுள்ளார், இதனை நாம் நிச்சயமாக வரவேற்போம்.  பேராயருக்கு நாம் ஆதரவை வழங்குவோம், அதேபோல் தான் நாமும் எமக்கு நியாயம் வேண்டும் என தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டுள்ளோம். 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை அதனையே கேட்டுநிற்கின்றோம் என்றார்.