எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளனவா ?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய அல்லது வேறு ஏதேனும் விஷ மூலக்கூறுகள் உள்ளனவா? இல்லையா? என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தினால் நேற்று ஞாயிறுக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.

விஷத் தன்மையற்ற உணவு பொருட்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியது 1980 (26) ஆம் இலக்க உணவு சட்டத்தின் கீழ் உங்களுடைய பொறுப்பாகும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தில் 11(1) உறுப்புரைக்கமைய நீங்கள் உணவு தொடர்பான முக்கிய அதிகாரியாவீர்கள்.

குறித்த உறுப்புரையில் கூறப்பட்டுள்ளமைக்கமைய முக்கிய அதிகாரியான நீங்கள், இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய அல்லது வேறு ஏதேனும் விஷ மூலக்கூறுகள் உள்ளனவா? இல்லையா? என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.