நிலாவரையில் தொல்லியல் அகழ்வு தடுத்து நிறுத்தம்!தவிசாளரை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தை மாத இறுயிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபடமுயற்சித்தனர்.

இந்த முயற்சிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளார், அரசியல் பிரதிநிதிகள் மற்றும்  பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர்நடவடிக்கைகளுக்காக இன்று மாலை 2 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும்  இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் மேலதிகாரிகளும் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.