ஜெர்மனியில் தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக பாரியளவில் போராட்டம்

ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜெர்மனியில் இன்று பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கும், கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்த வகையில்,ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 100க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் இன்றைய தினமும், நாளைய தினமும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதேவேளை, தஞ்சம் கோருவோர் ஜேர்மனியில் தங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாகவும் , தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்கள் தமது பதிவுகளை மேற்கொள்ளச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜேர்மனியின் இந்தச் செயற்பாடு, அங்குள்ள தமிழ் சமூகம் மற்றும் பல்வேறு நாடுகளின் புலம்பெயர் தமிழர்களிடையே அதிர்ச்சியையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.