பிரதான சூத்திரதாரி மெளலவிதான்!சாட்சிகளுடன் நிருபியுங்கள்-சரத் வீரசேக

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதியுட்ச தண்டனையை வழங்குவது மாத்திரமின்றி தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரினதும் சொத்துகளும் அரசுடமையாக்கப்படும். அவ்வாறு அரசுடமையாக்கப்படும் சொத்துகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும் பரிசீலனை செய்யப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசாரணை அறிக்கை, அரச புலனாய்வுத்துறையின் அறிக்கை, பொலிஸாரின் அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, வெளிநாட்டு புலனாய்வுத்துறையின் விசாரணை அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளின் பிரகாரம் தான் நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரியென அறிவித்துள்ளேன். இவர் பிரதான சூத்திரதாரி இல்லையென கூறுபவர்கள் உரிய சாட்சியங்கள் இருந்தால் ஒப்படைக்கலாமெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான இறுதிநாள் விவாதத்தில் பதில் உரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 276 பேர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களுக்காக இன்றும் கவலையடைகிறோம். 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமக்கு நீதி கிடைக்கும் வரை காத்திருக்கின்றனர்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார்? தாக்குதல்களுக்கான நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்? என்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக தெளிவாக தெரிவிகிறது. எத்தகைய சவால்கள் வந்தாலும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகைய பதவி நிலையை வகித்தாலும் தராதரம் பாராது குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பயங்கரவாதத் தடுப்பு பிரிவு, சிஐடி மற்றும் பொலிஸாரினால் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 75 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 54 பேரில் 50 பேரை நாட்டுக்கு அழைத்துந்துள்ளோம் என்பதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சட்ட மா அதிபருக்கு இந்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடைத்துள்ளதால் 32 பேருக்கும் எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய அவர் இரவு – பகலாக செயற்பட்டு வருகிறார். அதன் காரணமாக வழக்குத் தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவதாக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதியானதல்ல. தற்போது இந்த விடயம் சட்ட மா அதிபர் கையில்தான் உள்ளது.

செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல்களின் சூத்திரதாரியான ஷேக் மொஹமட் 18 வருடங்களாக சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு எதிராக இன்னமும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ராஜிவ் காந்தியின் கொலை வழக்கின் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்க இந்தியாவுக்கு பல வருடங்கள் சென்றன. என்றாலும் சட்ட மா அதிபர் தற்போது எடுக்கும் முயற்சியால் விரைவாக இவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வார். அதேபோன்று நாம் முன்னெடுக்கும் விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன், ஐ.எஸ் கருத்தியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.

பிரதான சூத்திரதாரியை மறைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக தேசியப் பாதுகாப்பை கணக்கில் எடுக்காது செயற்பட்டவர்கள் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தால் தாக்குதல்களை இலகுவாக தடுத்திருக்கலாம். புலனாய்வுத்துறையின் பிரதானி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் சஹ்ரானின் செயற்பாடு குறித்து மூன்றுமுறை எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவனல்லை சம்பவம் தொடர்பில் புலனாய்வுத்துறை அறிவித்தும் அதுதொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற ஐந்து வாரங்களுக்கு முன்னர்கூட சஹ்ரானின் சகோதரர்கள் தொடர்பிலான தகவல்களை முன்வைத்து அவர்களை கைதுசெய்யுமாறு புலனாய்வுத்துறை கூறியுள்ளது. என்றாலும் அவர்கள் கைதுசெய்து உரிய விசாரணைகளை முன்னெடுக்காது விடுவிக்கப்பட்டனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றிருக்காது. இரணத்தீவில் 2 பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்திருந்தாலும் தாக்குதல்களை தடுத்திருக்கலாம். அல்லது தாக்குதல் இடம்பெற ஐந்து தினங்களுக்கு முன்னர் வானத்தவில்லு பகுதியில் சஹ்ரான் துவிச்சக்கரவண்டியொன்றை வெடிக்க செய்து பரிசீலனை செய்து பார்த்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் இந்த அழிவை தடுத்திருக்கலாம். இறுதி சந்தர்ப்பத்தை கடந்த அரசாங்கம் கைவிட்டிருந்ததால்தான் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் தேசிய ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகளை வெளியிட்டமை மற்றும் மாவனல்லை சம்பவம், நாட்டின் சட்டத்தை மதிக்க மாட்டோமென கூறிய காரணிகளின் அடிப்படையில் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் சஹரானின் குழுவினருக்கோ அல்லது அவரது வலையமைப்புகோ எவ்வித நிதியும் அளிக்கப்படவில்லையென்பதை பொறுப்புடன் கூறுவதுடன் அது குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முழுமையான நிதி உதவியை இப்ராஹிம் சகோதரர்கள்தான் வழங்கியுள்ளனர். 2014ஆம் ஆண்டுமுதல் தாக்குதல்களுக்கான பின்புலத்தை உருவாக்க 500 இலட்சத்தை வழங்கியுள்ளனர்.

தாக்குதல்களின் சூத்திரதாரியான இப்ராஹிம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ஜே.வி.பியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் பெயரிடப்பட்டிருந்தார். இவ்வாறான அடிப்படைவாத குற்றச்சாட்டுகளை உடையவர்கள் ஜே.வி.பியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டிருந்ததை தெரியாதென கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. எனவே, ஜே.வி.பியிடம் இதுதொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியென நான் கூறியிருந்தேன். ஆனால், நௌபர் மௌலவியல்ல பிரதான சூத்திரதாரியென சில எம்.பிகள் கூறியிருந்தனர். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில்தான் மேற்படி கூற்றை நான் முன்வைத்திருந்தேன். அரச புலனாய்வுத்துறையின் அறிக்கை, பொலிஸாரின் அறிக்கை, விசாரணை அறிக்கை, வெளிநாட்டு புலனாய்வுத்துறையின் அறிக்கை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த விடயத்தை நான் கூறியுள்ளேன்.

ஆகவே, இந்த சாட்சியங்களுக்கு மேலதிகமாக பிரதான சூத்திரதாரி ஒருவர் இருந்தால் அந்த சாட்சியங்களை எமக்கு பெற்றுத்தாருங்கள். சஹ்ரானின் மனைவியும் இதுதொடர்பில் சாட்சியங்களை வழங்கியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளிலும் இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது மாத்திரமின்றி தொடர்புடைய அனைவரினதும் சொத்துகளும் அரசுடமையாக்கப்படும். அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் சொத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.