தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்திற்கான காரணம் வெளியாகியது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்துக்கு காரணம் வாகனங்களுக்கிடையில் குறிப்பிட்டளவு தூர இடைவெளியை பேணாமை மற்றும் விபத்துக்கு காரணமான வாகன சாரதி வீதியை ஒழுங்காக அவதானிக்காமையாகும் என்று பொலிஸ் பேச்சானர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நேற்று அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதிவேக நெடுஞ்சாலை என்பது பயணிகள் அசௌகரியமின்றி பயணிப்பதற்கானதாகும். எனினும் இங்கு இடம்பெறும் விபத்துக்களுக்கான காரணம் இரு வாகனங்களுக்கு இடையில் குறிப்பிட்டளவு இடைவெளி பேணப்படாமையாகும்.

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை செலுத்தும் போது சாரதியின் கவனம் வேறு திசையில் காணப்படுமாயின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாதாரண நாட்களில் அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். எனினும் மழைகாலங்களில் இந்த வேகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே அதற்கு ஏற்ப சாரதிகள் செயற்பட வேண்டும்.

அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது மிக முக்கிய தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது , அவசர சமிஞ்ஞையை உபயோகித்து வாகனத்தை நிறுத்தி தொலைபேசியில் உரையாட முடியும். மாறாக வீணாக அதிவேக வீதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. அது குற்றச் செயலாகும் என்றார்.