நாட்டில் சீனாவின் உருவாக்கத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்! – எஸ்.எம். மரிக்கார்

சிங்கப்பூர் அல்லது துபாய் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நகரம் போன்ற நகரத்தை உருவாக்குவதைத் தாம் எதிர்க்கவில்லை எனவும், பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும் முயற்சியைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொள்ளையிட்ட பணம், தமது நண்பர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே நாட்டையும், மக்களையும் சீனாவுக்கு  காட்டிக் கொடுத்து வருகின்றனர்.

துறைமுக நகரில் உயர் முகாமைத்துவ பதவி ஒன்று இருக்கின்றது. அந்த பதவியை வகிப்பது யார்? அஜித் நிவாட் கப்ராலின் மகன்.

துறைமுக நகரின் கொடுக்கல், வாங்கல்களில் இலங்கை அரசுக்கு ஒரு வீதம் கிடைக்கும். சிங்கப்பூர், துபாய் போன்ற பொருளாதார நகரங்களை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

பொருளாதார நகரம் என்ற பெயரில் தமது உற்ற நண்பர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை சீனாவுக்குக் காட்டிக்கொடுப்பதையும் நாட்டுக்குப் பொறுப்புக் கூறாத சீன ஈழத்தை உருவாக்குவதையுமே நாங்கள் எதிர்க்கின்றோம் என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.