அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கால வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்ற நிலைப்பாட்டை இன்னும் அரசு எடுக்கவில்லை. அந்த அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பழைய முறையில் நடத்தப்படுமா? அல்லது தொகுதிவாரி அல்லது விகிதாசார முறையில் நடத்தப்படுமா? என்ற கேள்வி கூட காணப்படுகின்றது.
அந்த நிலைமையில் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அதில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி இடம்பெற வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகின்றது.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை விடுத்து எதிர்மாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் முன்வைப்பதை நிறுத்தவேண்டும். அண்மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்ற கருத்தினை குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கருத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும் அதாவது அந்த அந்த சூழ்நிலையில் சம்பந்தன் ஐயாவினால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்ற அடிப்படையிலேயே தான் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. குறிப்பாக அந்த சூழ்நிலையின் போது சம்பந்தன் ஐயாவின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் விக்னேஸ்வரனை ஆதரித்து வெற்றியடைய செய்தோம்.
ஆனால் அதே கருத்தினை இன்று நாங்கள் கொண்டிருக்க முடியாது. அதனால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று கருத முடியாது. எனவே எதிர்காலத்திலும் நாம் இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து சிறந்த ஒரு ஆட்சியை அமைப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் எனவே எதிர்வரும் காலத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.