கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (20) முற்பகல் 10.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தகவல் தொழில்நுட்ப தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான பொறியாளர் ஜி. கபில ரேணுக பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சி (இரு வெவ்வேறு மனுக்கள்), ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ‘Colombo Port City Economic Commission’ என அழைக்கப்படும் குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்படும் சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இம்மனுக்களின் பிரதிவாதியாக சட்ட மாஅதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெனாண்டோ, ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (19) முற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றையநாளுக்கான நீதிமன்ற அமர்வின் நிறைவில், குறித்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளையதினத்திற்கு ஒத்திவைப்பதாக, நீதிபதிகள் குழாம் அறிவித்தது.