கோவிட் – 19 அச்சுறுத்தல்! இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா

பிரித்தானியாவில் கோவிட் – 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், பயண தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் எனவும், முன்னெச்சரிக்கை அடிப்படையில், இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், அல்லது பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்கள் நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள், எனினும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

கோவிட் – 19 தொற்று தொடர்பான COG-UK இன் புள்ளிவிவரங்களின்படி, ஏப்ரல் 16 வரை இந்தியா மாறுபாட்டின் 182 வழக்குகள் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 162 வழக்குகள் கடந்த ஐந்து வாரங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்ப்பது கடினமானது. ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளோம் என பிரித்தானிய சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவிற்கு அரச விஜயம் மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக தனது பயணத்தை இரத்து செய்திருந்தார்.

எதிர்வரும் 26ம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் கோவிட் – 19 அதிவேகமாக பரவுவதால் பிரித்தானிய பிரதமரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது, பயண தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் “சிவப்பு பட்டியலில்” இந்தியா இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் பிரித்தானிய அரசு அண்மையில் தடை விதித்துள்ளது.

குறித்த நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், சுமார் 40 நாடுகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு: ஓமான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஆப்பிரிக்கா: அங்கோலா, போட்ஸ்வானா, புருண்டி, கேப் வெர்டே, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈஸ்வதினி, எத்தோபியா, கென்யா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, ருவாண்டா, சீஷெல்ஸ், சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே

ஆசியா: பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் தென் அமெரிக்கா: அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே, வெனிசுலா.