முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் உடல்நிலை திருப்திகரமாக இல்லை என சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கூறியதாகவும், சிறப்பு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அண்மையில் சஜித் பிரேமதாச சந்தித்து பேசியிருந்தார். அத்துடன், அமைச்சர் நாமல் ராஜபக்சவும் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது