இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது உட்பட்ட விடயங்கள் மூலம் இந்தியா ஆதரிக்கிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படி அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியது என்று ஜெய்சங்கர் சமீபத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின் பின்னணியில் கடந்த மாதம் மாநிலங்களவையில் இலங்கைத் தமிழ் பிரச்சினையை அதிமுக தலைவர் எழுப்பிய நிலையில் அமைச்சரின் இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை குறித்த கலந்துரையாடலின் போது இந்தியாவின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் தமது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை “நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யவும், சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக தொடர்ந்து ஈடுபடவும் இந்தியா குறித்த பிரேரணையின்போது வலியுறுத்தியது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை பரிசீலித்தபோது, இந்தியா அனைத்து நாடுகளுடனும் “நெருக்கமாக தொடர்பில்” இருந்து வந்தது.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர், தம்பிதுரையிடம் உறுதியளித்தாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.