உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்று 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், ஏப்ரல் 21இல் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக இறை பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் உயிர் நீத்தவர்களுக்கு, மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்ட நிலையில் இதன்போது பாடசாலை மாணவர்கள், மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.