சிறீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மீது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் கூடியபோது சபையில் எழுந்து முக்கிய விடயமொன்றை தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி இடம்பெற்றிருப்பதை சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தினேஸ் குணவர்தன,

நாடாளுமன்ற அமர்வின்போது சபா மண்டபத்தில் நான் நேற்று நாாடளுமன்ற பொலிஸாரினால் வழக்குகளுக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சபாநாயகரிடம் கேட்டிருந்தேன். அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போலியான குற்றச்சாட்டு, பேச்சுக்கள் குறித்த சட்டங்களும் நிலையியற் கட்டளைச் சட்டத்தில் உள்ளன.

அந்த வகையில் அபாயகரமாக, வழக்குகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள் இருக்கின்றதா என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவிப்பு ஒன்றை வெளியிடும்படியும் சபாநாயகரிடம் கேட்கின்றேன். அதேபோல பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படியான செயற்பாட்டினை ஏற்க முடியாது. நாடாளுமன்ற பிரவேச வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதோடு பொலிஸார் கண்முன்னே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய அரச தரப்பினர், சபாநாயகர் மீதும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை சபையிலுள்ள உறுப்பினர்களிடம் நினைவுப்படுத்தினார்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் நிலைக்கு மத்தியில் ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களிடையே மோதலும் ஏற்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தனர்.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா மக்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தி நிலையானது, அவர்களால் பதிவிடப்பட்ட பதிவுகளில் இருந்து அறியமுடிந்ததாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.