கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று புதன்கிழமை இரவு மும்பையில் ஆரம்பமான 15 ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை மேற்கொள்ள, முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்தது சென்னை.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்களை எடுத்தது.

அதன் பின்னர் ருதுராஜ் மொத்தமாக 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை பெற்று, வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அமைவாக சென்னை அணி தனது முதல் விக்கெட்டை 12.2 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு இழந்தது. அதே ஓவரில் பவுண்டரி அடித்த டூப்பிளஸ்ஸி அரைசதத்தை எட்டினார்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த டூப்பிளஸ்ஸி மற்றும் மொயின் அலி அதிரடிகாட்ட சென்னை அணி 16 ஓவர்கள் நிறைவில் 150 ஓட்டங்களை கடந்தது.

சுனில் நரேன் வீசிய 17 ஆவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த மொயின் அலி மூன்றாவது பந்தில் மொத்தமாக 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து டூப்பிளஸ்ஸியுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

ரஸ்ஸல் வீசிய 19 ஆவது ஓவரில் டூப்பிளஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ஓட்டங்களை தொட்டது. ஆனால், அதே ஓவரின் இறுதிப் பந்தில் தோனி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை குவித்தது.

டூப்பிளஸ்ஸி 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடனும், ஜடேஜா எதிர்கொண்ட ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதையடுத்து 221 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட கொல்கத்தா அணி களமிறங்கியது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, (சுப்மன் கில் டக்கவுட், நீதிஷ் ராணா – 9, இயான் மோர்கன் – 7, சுனில் நரேன் – 4, ராகுல் த்ரிபாத்தி – 8) கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் ஆறாவது விக்கெட்டுக்காக ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

எனினும் ரஸ்ஸல் 11.2 ஓவரில் மொத்தமாக 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள, 3 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்று, சாம் கர்ரனின் பந்து வீச்சில் போல்ட் ஆக, 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் லுங்கி இங்கிடி வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக்கும் 24 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில் ரஸ்ஸலின் வெளியேற்றத்தின் பின்னர் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார்.

எனினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களின் ஆட்டமிழப்புக் காரணமாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த பேட் கம்மின்ஸ் மொத்தமாக 34 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டூப்பிளஸ்ஸி தெரிவானர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் மூன்று வெற்றிகளை பதிவுசெய்து, பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இதேவேளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தொடரின் 14 ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

121 என்ற இலகுவான வெற்றியிலக்கை  நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணி 18.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.