பாகிஸ்தானின் நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு ; நால்வர் பலி, 12 பேர் காயம்

பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் புதன்கிழமை இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பாரிய வெடிப்பில் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில், வெடிக்கும் சாதனம் ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்ததாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசார் இக்ரம் கூறினார்.

உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் அனர்த்தத்தில் 10 கார்கள் தீக்கிரையானதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

சிவில் மருத்துவமனை வட்டாரங்களின்படி, அசாதுல்லா, சஜ்ஜாத் அப்பாஸி இறந்த இருவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், மேலும் இருவர் அடையாளம் காணப்படவில்லை.

காயமடைந்த 12 பேரில் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு உதவி ஆணையர்களும் அடங்குவர். காயமடைந்த மற்ற இருவரின் நிலைமை ஆபத்தானது என்று மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் ஜியா லாங்கோவ் கருத்துப்படி, பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் நோங் ரோங் செரீனா ஹோட்டலில் விருந்தினராக கலந்து கொண்டார். புதன்கிழமை வெடித்த நேரத்தில் தூதர் ஹோட்டலில் இல்லை என்று லாங்கோவ் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பலூசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் சியாவுல்லா லாங்கோவ்,

இப்பகுதியில் பயங்கரவாத அலை இருப்பதாக கூறினார். “எங்கள் சொந்த மக்கள் இந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்,” தாக்குதலுக்கு முன்னர் இது தொடர்பில் எச்சரிக்கை எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

சீனத் தூதர் தாக்குதலின் வெளிப்படையான இலக்கு என்பது குறித்த ஊடக செய்திகளில் உரையாற்றிய லாங்கோவ், வெடிப்பு நடந்தபோது தூதர் ஹோட்டலில் இல்லை. நான் இப்போது சீனத் தூதரைச் சந்தித்தேன், அவர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் என்று அவர் கூறியதுடன் விசாரணை தாக்குதலின் நோக்கத்தை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

சீனத் தூதரகம் இது தொடர்பில் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.