சீனாவின் வெடி குண்டுகள் கொள்வனவு செய்ய மேலும் சில உடன்படிக்கைகள்

சீன அமைச்சரின் விஜயத்தின் மூலம், சீனாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்போது நடைமுறைச் சாத்தியமான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், இலங்கைக்கு விஜயம் செய்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் விஜயத்தின் ஒர் அங்கமாக ஸ்ரீலங்காவிற்கும் சீனாவிற்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழுவுடன் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான பிரதிநிதிகள் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்காவிற்கான சீன தூதுவர் கி சென்ஹோங், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா ஸ்ரீலங்காவின் வரலாற்று ரீதியில் நட்பு நாடாக இருந்து வருவதாக கூறினார்.

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிவந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் தனது ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் தனது விஜயத்தின் போத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.