இந்தியாவில் உயிர்களை பலியெடுக்கும் கொரோனா! 17 நாடுகளுக்கு பரவியுள்ளது -உலக சுகாதார ஸ்தாபனம்

இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகையில்,

“ஏப்ரல் 27 ஆம் திகதி வரையில், 17 நாடுகளில் உருமாறிய இந்திய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இன்புளூவன்சா வைரஸ்களின் மரபணு தரவுகளை அளிக்கிற ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி. என்னும் உலகளாவிய அறிவியல் முயற்சி மற்றும் முதன்மை மூலத்தில் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கிறது.

இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ்களில் இந்த உருமாறிய வைரஸ் அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. இது அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டது.

இருப்பினும் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும், இந்த உருமாறிய கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளன என மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.