வடமாரட்சியில் அதிகாலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு-பதட்டத்தில் பிரதேச மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த கன்ரர் ரக வாகனத்தை மறித்துள்ளனர். வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

அதன் போது வாகனத்தில் பயணித்தவர்களும் வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்ற ஒருவரும் தமது வாகனங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்

அதனை அடுத்து கன்ரர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் மீட்டதுடன் பருத்தித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாகனங்களை பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர் தப்பி சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.