அரசாங்கம் கொண்டிருக்க கூடிய தவறான வெளிவிவகார கொள்கையும் சீன சார்பு நிலையும் இலங்கைக்கு பேராபத்தாக அமையலாம். எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை. இராஜதந்திர ரீதியாகவே ஏனைய நாடுகளுடன் பகையை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. சீன சார்பு கொள்கை அதிகமாக வெளிப்படும் பட்சத்தில் இலங்கையின் சுயாதீன வெளிவிவகார கொள்கை சிதைவடைந்து போகும்.
நாட்டு மக்களும் இதனை நன்கு உணர்ந்துள்ளனர். அரசாங்கம் எந்தளவு சீன சார்பு நிலையில் உள்ளதென்பதை அறிந்துள்ளனர். இதன் வெளிப்பாட்டை சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணி சென்ற போது மக்களுக்கு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்திய போது வெளிப்படுத்தினர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள விடின் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையே ஏற்படும் என தெரிவித்தார்.
இதேவேளை கொவிட் நிலைமைகள் மற்றும் மே தின நிகழ்வினை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.